வியட்நாமில் கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மீட்பு பணிகளின்போது மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 39 பேரை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 317 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சுமார் 22,000 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்படைந்துள்ளது.
1,80,000 விலங்குகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் உள்ள 77 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. இங்கு 4,80,000 ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.