விமானத்தில், பெண் ஓருவருக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழகத்தை சேர்ந்த பொறியாளருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி ( வயது35) என்ற பொறியாளர் அமெரிக்காவில் வசிக்கிறார். கடந்த ஜன.,3ம் தேதி லாஸ் வேகாசிலிருந்து டெட்ராய்ட் நகருக்கு சென்ற விமானத்தில் தனது மனைவியுடன் பயணம் செய்தார்.
அப்போது பக்கத்து இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு, பிரபு ராமமூர்த்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த பெண் திடுக்கிட்டு விழித்து பார்த்த போது, தனது ஆடையில் உள்ள பொத்தான்கள், ஜிப்கள் கழற்றப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார். உடனடியாக, பிரபு ராமமூர்த்தி மீது பணிப்பெண்களிடம் அவர் புகார் அளித்தார்.
விமானம் தரையிறங்கியதும் இது குறித்து விமான நிலைய காவலர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பிரபு ராமமூர்த்தியை காவலர்கள் கைது செய்தனர். இது குறித்த வழக்கு நடந்துவந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபு ராமமூர்த்தி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அவருக்கான தண்டனை குறித்து அப்போது அறிவிக்கப்படவில்லை.
பிரபு ராமமூர்த்திக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் வாதாடினார். பிரபு ராமமூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. நற்பெயருடன் வாழ்கிறார் என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபு ராமமூர்த்தி கடந்த 2-015ம் ஆண்டு அமெரிக்காவுக்கு எச் – 1 விசா மூலம் வந்தார். பொறியாளரான அவர் அங்கு சிறப்பாக பணிபுரிந்தார். அவரது தந்தை விவசாயி. “ஏழை தமிழக விவசாயியின் மகனாக பிறந்த பிரபு ராமமூர்த்தி தனது திறமையாலும், உழைப்பாலும் நன்கு படித்து அமெரிக்காவில் உயர் பதவியில் அமர்ந்தார். ஆனால் தனது ஒழுங்கீனமான செயலால் அப்பது வாழ்க்கையை இழந்து நிற்கிறார்” என்று அவரது நண்பர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.