விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் தொடரி Vs இருமுகன்
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் தயாராகி வரும் படம் ‘தொடரி’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டாலும், கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் அனைத்து கிராபிக்ஸ் பணிகளும் முடிந்து தணிக்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. தணிக்கை பணிகள் முடிந்து இப்படத்தை விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினங்களான செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது.
இதே தினத்தில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘இருமுகன்’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அதனையும் முடித்து விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இப்படத்தையும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினங்களான செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் தான் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ மற்றும் விக்ரம் நடித்த ’10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்தாண்டு அதே தினத்தில் இருவரின் படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.