விடிய விடிய சோதனை! தலைமை செயலாளர் வீட்டில் சிக்கியது என்ன?
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவின் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக கடந்த மாதம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மேலும், கருப்பு பணத்தனை ஒழிக்கும் நடவடிக்கையில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு மூட்டை மூட்டையாக பணம் மற்றும் தங்கத்தை கைப்பற்றி வருகின்றனர்.
இதன் வரிசையில் நேற்று இரவு தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவின் அண்ணாநகர் வீட்டிலும்,திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
விடிய விடிய நடத்தப்பட்ட இந்த சோதனை அதிகாலையில் நிறைவு பெற்றது.
இந்நிலையில், சோதனையின் முடிவில் 25 முக்கிய ஆவணங்களும், கட்டுக்கட்டாக 30 லட்சம் ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகளும், 5 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த சோதனையின் போது முதலில் தமிழக பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென பகல் 12 மணிக்கு,ஆயுதம் தாங்கிய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டனர்.
அண்ணாநகரில் உள்ள ராம்மோகன ராவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட தருணத்தில் திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீடு, அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூர், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு உள்பட 13 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளன.
மேலும், ராமமோகன் ராவின் மகன் விவேக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் நந்தனத்திலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராமமோகனராவின் உதவியாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வீடு, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதற்கு முன்னதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 131 கோடி ரூபாய் ரொக்கம் 171 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.
இந்த சோதனையில், புதிய 2000 ரூபாய் கட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிட வேண்டிய விடயமாகும்.