வாகன டயர்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏறக்குறைய 100 சதவீதம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக பொது போக்குவரத்து உட்பட ஒட்டுமொத்த போக்குவரத்து கட்டமைப்பும் சரிந்துள்ளதாக போக்குவரத்து சேவை வர்த்தகத்தில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.
மேலும், பற்றரிகள் மற்றும் வாகன சேர்விஸ் கட்டணங்கள் என்பனவும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
50 ஆயிரத்தில் இருந்த பஸ் டயரொன்றின் விலை 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபா வரை விலை உயர்ந்துள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு
முன்னர் 21 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லொரி டயர் ஓன்று (700 – 15 அளவு) தற்போது 34,000 ரூபா முதல் 40,000 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட டயர் 45,000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில்,
ஆறு மாதங்களுக்கு முன்பு 9,500 ஆக இருந்த ‘டேக் டயர்’ (DAG TYRE) எனப்படும் ரீஃபில் டயர்களின் விலை 16,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
‘அல்டோ’, ‘வேகன்ஆர்’ கார் டயர்களும் உயர்ந்துள்ளதுடன், அவை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 9000 ரூபா முதல் 12,000 வரை காணப்பட்டபோதிலும், தற்போது 16,000 ரூபா முதல் 20,000 ரூபா வரை உயர்ந்துள்ளது.
முச்சக்கர வண்டிகளின் டயர்களும் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து 1,000 ரூபாவிற்கு மேல் அதிகரித்துள்ளது , முச்சக்கர வண்டி ‘டயர்கள்’ அல்லது ரீஃபில் செய்யப்பட்ட டயர்களின் விலையும் சுமார் 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது” என கூறினர்.
அனைத்து வாகனங்களின் உதிரிப் பாகங்களின் விலையும் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், ஆறு மாதங்களுக்கு முன் 3000 ரூபாவுக்கு வாங்கிய ரேசர்கள் தற்போது 9000 ரூபாவாக காணப்படுகிறது.
இவ்வாறான நிலைமைகள் காரணமாக போக்குவரத்து சேவை தொழிலில் ஈடுபட்டு வரும் பலர் தொழிலை விட்டு வெளியேற நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது என்றார்.