எலும்புத் துண்டுகளை காணாமல் ஆக்கி சாட்சியங்களை அழித்தமை தொடர்பில் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தின் மூன்றாவது சந்தேக நபராக கொழும்பின் முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்வதா, இல்லையா என்பது குறித்த முக்கிய தீர்ப்பை எதிர்வரும் 19ஆம் திகதி அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கியிடம் புலனாய்வுப் பிரிவு இடையீட்டு மனுவூடாக விசேட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து, மூன்றாவது சந்தேக நபராக ஆனந்த சமரசேகரவை பெயரிட்டு கைது செய்ய உத்தரவளிக்குமாறு கோரியது.
அது தொடர்பில் அது குறித்து ஆராய்ந்த பின் நீதிவான் இதனை அறிவித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்கிரமசேகரவின் கீழ் மனிதப் படுகொலைகள் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க, பிரதான பொலிஸ் பரிசோதகர் விமலசிறி ரவீந்திர குழுவினரின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாகவே இந்த கோரிக்கை நீதிமன்றிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனந்த சமரசேகர கொழும்பு மேல் நீதிமன்றில் முன் பிணை கோரி தாக்கல் செய்துள்ள வழக்கும், தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், அவரைக் கைது செய்வதற்கான உத்தரவை வழங்க முடியுமா என்பதைப் பரிசீலிக்கவே இந்தக் கால அவகாசம் மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கியினால் பெறப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்ட வஸீம் தாஜுதீன் தொடர்பில் முதலாவது பிரேத பரிசோதனைகளை சட்ட வைத்திய அதிகாரியாக அப்போது கொழும்பில் கடமையாற்றிய ஆனந்த சமரசேகரவே நடத்தியிருந்தார்.
பின்னர் கடந்த 2015இல் வஸீமின் சடலம் மீளத் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது ஆனந்த சமரசேகரவின் மரண விசாரணை அறிக்கையானது பொய்யான தகவல்களைக் கொண்டிருந்தமை உறுதியானது.
இதையடுத்து, ஆனந்த சமரசேகர மீது இலங்கை மருத்துவ சபை நடத்திய விசாரணைகளிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு அவரது மருத்துவ அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றிடம் அனுமதி கோரியுள்ளது.