வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியாவது நல்லதுதான்: இயக்குநர் ஆனந்த் ஷங்கர்
‘இருமுகன்’ படத்தின் கதைக்களம் என்ன?
இது சயின்ஸ் பிக்ஷனை மையமாகக் கொண்ட படம். இது ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும். ‘இருமுகன்’ என்ற தலைப்பைப் பார்த்து, படத்தில் விக்ரமுக்கு இரட்டை வேடமா என்று சிலர் கேட்கிறார்கள். அது சஸ்பென்ஸ். இப்படத்தின் கதை ஒரே இடத்தில் நடக்காமல் மலேசியா, டெல்லி, காஷ்மீர், புக்கட் என பல இடங்களில் பயணித்துக்கொண்டே இருக்கும். வழக்கமான ஒரு கமர்ஷியல் படமாக ‘இருமுகன்’ இருக்காது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்.
இதில் உளவுப்பிரிவு அதிகாரி மற்றும் திருநங்கை என 2 வேடங் களில் விக்ரம் நடித்திருப்பதாக கூறப் படுகிறதே?
இதில் ‘ரா’ உளவு நிறுவன அதிகாரியாக ஒரு பாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். திருநங்கை கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப் பதாக 4 மாதங்களுக்கு முன் செய்திகள் வந்தபோதே நான் மறுத் துள்ளேன். மற்றொரு கதா பாத்திரம் நீங்கள் படம் பார்க்கும் போது புதிதாக இருக்கும். அதை நான் சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும்.
விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் போன்ற பெரிய நட்சத்திரங்களை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?
மூவருமே சிறந்த கலைஞர்கள். நான் எதை மனதில் வைத்து காட்சியை எழுதினேனோ, அதை விட ஒரு படி அதிகமாக தங்கள் நடிப்பின் மூலம் அவர்கள் அதை எடுத்துச் சென்றுள்ளனர். இப் போது எடிட்டிங்கில் படத்தைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு இவர்களு டன் பணியாற்றுவதில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. கால்ஷீட்டுக்கு தேதிகள் கிடைப் பதில்தான் சிறிது பிரச்சினை இருந்தது. அதையும் அவர் கள் அட்ஜெஸ்ட் செய்து கொடுத்துவிட்டார்கள். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.
‘அரிமா நம்பி’ படத்துக்குப் பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?
அந்த படத்தை முடித்த பிறகு அடுத்த படத்தை பெரிய படமாக பண்ணவேண்டும் என்று நினைத் தேன். அதற்காக இந்த கதையை உருவாக்க சிறிது நேரம் எடுத் தது. மேலும் இப்படத்தை யார் எடுப்பது என்று 2 தயாரிப் பாளர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இப் போது படம் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்திருப்பதால் அந்த இடைவெளி பெரிதாகத் தெரியவில்லை.
‘அரிமா நம்பி’ படத்தை பார்த்து விட்டு உங்கள் குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸ் என்ன சொன்னார்?
‘அரிமா நம்பி’ படத்தை பார்த்து விட்டு பாராட்டினார். அவருக்கு நான் மிகவும் நெருக்கமானவன். அவரிடம் நிறைய கதைகள் குறித்து விவாதித்திருக்கிறேன். எனக்கு என்ன மாதிரி கதைகள் சரிவரும் என்பது அவருக்கு தெரியும். தற்போது ‘இருமுகன்’ டீஸர் பார்த்துவிட்டு பாராட்டினார். கதைக்களத்தைச் சொன்னேன். நல்லாயிருக்கு, கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று நம்பிக்கை அளித்தார். அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பல விஷயங் கள் இப்படத்தில் எனக்கு உபயோகமாக இருந்தன.
‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறீர் கள். எப்போது விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்கப் போகிறீர் கள்?
முதலில் அவர்களுக்கான கதையை நான் தயார் செய்ய வேண்டும். பிறகு அதை அவர்களிடம் சொல்லி நிச்சயமாக படம் பண்ணுவேன்.
என்னதான் சஸ்பென்ஸுடன் ஒரு படத்தை எடுத்தாலும், முதல் நாள் முதல் காட்சிக்கு பிறகு சமூக வலை தளத்தில் படத்தின் சஸ்பென்ஸை சொல்லிவிடுகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
நல்லதாகத்தான் பார்க்கிறேன். முன்பெல்லாம் ஒரு படம் நன்றாக இருந்தால் அது வெளியே தெரிய பல நாட்கள் ஆகும். இப்போது படத்தைப் பற்றிய தங்கள் விமர் சனத்தை உடனடியாக சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுகிறார்கள். இதனால் ஒரு நல்ல படம் மக்களை எளிதில் போய்ச் சேர்கிறது. அது படத்துக்கு மிகப்பெரிய அளவில் உதவுகிறது. திரைக்கதை சரியாக இல்லாத பட்சத்தில் இந்த விஷயமே படத்துக்கு எதிராகவும் திரும்பும்.
படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் முதல் நாளே வெளியானால் கூட, அதை நான் எப்படி சொல்லி யிருக்கிறேன் என்பதை உங்களால் சமூக வலைதளத்தில் தெரிவிக்க இயலாது. முதல் நாள் முதல் காட்சியிலேயே சஸ்பென்ஸ் வெளியாவதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் மக்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து பார்ப்பார்கள்.