விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம், சட்ட சிக்கல் ஏதும் கிடையாது என விவசாயம், கால்நடை வளர்ப்பு அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானது. இவரின் கருத்துக்கு அமைய செயற்பட்டு நெருக்கடிக்குள்ளாக வேண்டாம் என்று விவசாயிகளிடம் கேட்டுக் கொள்கிறோம். அமைச்சரின் தவறான கருத்தை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் நயனக ரன்வல்ல தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் காரியாலயத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம், அதனால் எவ்வித சட்ட சிக்கலும் வராது என விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கால் காந்த அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானதொரு கருத்தாகும்.
விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்றால் விளைநிலங்களுக்கு வருகைத் தரும் விலங்குகளை கொல்லலாமா, என்ற கேள்வி எழும். காட்டு விலங்குகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டு வெறுப்புக்குள்ளாகியுள்ளர். இவ்வாறான பின்னணியில் விவசாயிகளுக்கு அமைச்சரின் கருத்து உத்தேவகமளிக்கும் வகையில் உள்ளது.
அமைச்சரின் இந்த பாரதூரமான கருத்து தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு எதனையும் குறிப்பிட முடியாது.
அமைச்சரின் கருத்துக்கு அமைய செயற்பட்டு நெருக்கடிக்குள்ளாக வேண்டாம்.
என்று விவசாயிகளிடம் கேட்டுக் கொள்கிறோம். நாட்டில் சட்டம் என்பதொன்று உள்ளது என்பதை விவசாயிகளும், அமைச்சரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அமைச்சரின் தவறான கருத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்.
அமைச்சர் லால் காந்தவின் கருத்துக்கு எதிராக சுற்றுச் சூழலியலாளர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற சுற்று வட்டத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தின் அதிகாரத்தை கிராமங்களுக்கு பகிரந்தளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட லால் காந்த விலங்குகளை கொல்ல வேண்டும் என்று குறிப்பிடுவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல என்று கடும் அதிருப்தி வெளிப்படுத்தினர்.