வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரைக்குமான காலப்பகுதியில் 6 ஆயிரத்து 999 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளானதாக சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் அதிகரிக்கும் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் தேற்று யாழ். நூலகத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தலமையில் இடல்பெற்றது.
இதன்போதே மத்திய சுகாதார அமைச்சின் மேற்படி தரவுகளும தெரிவிக்கப்பட்டது. இதில் அதி உச்சமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 ஆயிரத்து 870 பேரும் , வவுனியா மாவட்டத்தில் 816பேரும் , மன்னாரில் 518 பேரும் , கிளிநொச்சியில் 460 பேரும் பாதிக்கப்பட்டதோடு முல்லைத்தீவில் 335 பேர் டெங்குத் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதேநேரம் இதில் தற்போது மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் கட்டுப்பாட்டில் உள்ளபோதிலும் ஏனைய மூன்று மாவட்டங்களிலும் டெங்கின் தாக்கம் கானப்படுகின்றது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலேயே உச்ச நிலையில் இருப்பதனால் உள்ளூராட்சி சபைகள் , மாவட்டச் செயலகம் , சுகாதாரத் திணைக்களம் என்பன இணைந்து விசேட பணிகளை முன்னெணுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கபட்டது. இதன் பிரகாரம் எதிர் வரும் 22 மற்றும் 23ம் திகதிகளில் ஒருங்கிணைந்த பணியை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம் இந்த ஆண்டு வடக்கில் இதுவரை டெங்கினால் 7 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் , 5 மாவட்டங்களின் மேலதிக அரச அதிபர்கள் , 5 மாவட்டங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகள் , உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்