வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு!! இலங்கையிலிருந்து கனடா விரைந்த முக்கியஸ்தர்கள்
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடன் இணந்து ‘இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு’ என்ற சர்வதேச உயர்நிலை மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. நிறைவானதும், நிலையானதுமான வேலைத்திட்டங்களைக் கையாண்டு தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் வகையிலும் இம் மூன்று நாள் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்காபரோவிலுள்ள உயர்கல்வி நிலையமான Centennial Collegeஇல் 2017 ஜனவரி மாதம் 15ம் 16ம், 17ம் தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
இம் மூன்று நாட்களும், தமிழர் தாயகத்தின் பொருளாதார, கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புக்களின் நிலை மற்றும் தேவைகள் என்பன வடக்கு கிழக்கு மாகாண அரசுகளின் கல்வி, சுகாதார அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் ம்ற்றும் தாயகத்தின் துறைசார் வல்லுனர்களால் முன்வைக்கப்படும், புலம்பெயர் தமிழ் அறிவியலாளர்கள், துறைசார் வல்லுனர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் பலரும் இம்மாநாட்டில் பங்கேற்று, வடக்குக் கிழக்கு மாகாணங்களின் தேவைகளை ஆழமாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளையும் செயல்திட்டங்களையும் முன்மொழிவர். அத்துடன், திட்டங்கள் நிறவேற்ற வடக்கு கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு உதவும் வண்ணம் புலம்பெயர் தேசங்களில் உள்ள சர்வதேச அறிவுசார் வல்லுனர்களையும், தொழில் முனைவர்களையும் கொண்ட மீள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுக்களும் அமைக்கப்படும்.
கனடியத் தமிழர் பேரவை (CTC) ஒழுங்கமைக்கும் இந்த சர்வதேச மாநாட்டினை நடத்துவதற்கு கனடியத் தமிழர் மருத்துவ சங்கம் (CTMA), சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO), தமிழ் மருத்துவ அறிஞர் நிறுவனம்- பிரித்தானியா (MIOT-UK), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கனடா (TNA-Canada), கனடாவின் சில முக்கிய கல்விச்சபைகள் மற்றும் பல தமிழ் அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குகின்றன. இந்த சர்வதேச மாநாட்டிற்கான ஆலோசனைகளை அமெரிக்க தலைநகரான Washington D.C.யில் அமைந்துள்ள துரைசிங்கம் நிறுவனம் (Thuraisingham & Associates) வழங்கி உதவுகிறது.
தமிழர் தாயகத்தின் மீளக்கட்டுமானத்திற்கான தேவைகள் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் இம்மாநாட்டினைச் சிறப்பாக நடத்தி, அதன்மூலம் வடக்கு கிழக்கு வாழ் நம் மக்களுக்கு உதவுவதற்கு உங்கள் அனைவரினதும் பேராதரவைக் கோரி நிற்கிறோம். மேலதிக விபரங்களை மாநாட்டு இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இணையத்தளம்: www.developnortheast.org
நன்றி.
கனடிய தமிழர் பேரவை
3,423 total views, 593 views today
– See more at: http://www.canadamirror.com/canada/78369.html#sthash.JNYMxa6l.dpuf