வடக்கு , கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்கதாக முன்னெடுப் பதற்கு இரண்டு சிறப்பு படையணிகள் உருவாக்கப்படவுள்ளன என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
நேற்று மட்டக்களப்புக்குச் சென்ற ஜனாதிபதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண் டார். அதில் உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளதும், மக்கள் பிரதிநிதிகள தும் உதவியைத்தான் எதிர்பார்க்கின்றார் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு இதே தினம் (4ஆம் திகதி மார்ச் மாதம் 2017ஆம்ஆண்டு) வடக்கு மாகாணத்தில் “ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” அலுவலகத் திறப்பு விழா யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.“யாழ்ப்பாணத்தில் புதிய அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தினால்தான் நன்றாக இருக்கும். எதிர்வரும் 3 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் நான் இங்கே வருவென். பெரிய கூட்டம் போடுவதற்கு வரவில்லை. இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், அரசின் அமைச்சர்கள் என அனைவரையும் அழைத்து அபிவிருத்தி தொடர்பில் இங்குள்ள பிரச்சினைகளை எவ்வாறு விரைந்து தீர்ப்பது என்பது தொடர்பில் பேசவே நான் ஒவ்வொரு மாதமும் வரவுள்ளேன். பல பிரச்சினைகளை அதன்மூலம் தீர்க்கலாம் என்று நம்புகின்றேன்.”- என்று கூறிச் சென்றார்.
ஓராண்டாகியும் அப்படி ஏதும் நடக்கவில்லை. குழுவும் அமைக்கப்படவில்லை. ஜனாதிபதி மாதத்துக்கொரு முறை வரவில்லை. நேற்று மட்டக்களப்பில் இரு சிறப்பு ஜனாதிபதி படைகள் உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
“நீண்டகாலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வந்த போரின் காரணமாக பின்னடைந்திருந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுப்பதற்கு இரண்டு சிறப்பு ஜனாதிபதி படையணிகளை உருவாக்குவதற்கு நான் நடவடிக்கை எடுக்கின்றேன். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதிகளின் உதவியை எதிர்பார்க்கின்றேன்.”- என்று அவர் கூறினார்.