வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இரகசிய புலனாய்வு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வுப் பிரிவினர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர். இரண்டு மாகாணங்களிலும் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், அரசியல்வாதிகள் செயற்படும் விதம், அவர்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.