“வடக்கில் தமிழ் பெண்களுக்கு பாலியல் தொல்லை” சந்திரிகாவின் குற்றச்சாட்டுக்கு இராணுவம் பதில்
யுத்த பாதிப்புக்கு முகம் கொடுத்த தமிழ் பெண்கள் தற்போது சமூகம் மற்றும் படையினரின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக நல்லிணக்கப் பணியகம் தெரிவித்த கருத்தை இராணுவம் மறுத்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
“தேசிய நல்லிணக்க அலுவலகத்தின் பிரதான அதிகாரி தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி, இராணுவத்தினால் தமிழ் பெண்கள் பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று வெளியான ஊடக அறிக்கையை இராணுவம் முற்றாக மறுக்கின்றது.
2010 ஆம் ஆண்டு வடக்கில் சிவில் நிர்வாகம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவம் சிவில் நிர்வாக செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டது என்பதை சுட்டிக்காண்பிக்கின்றோம்.
இதற்கமைய, தற்பொழுது இராணுவம் எவ்வித சிவில் நிர்வாக நடவடிக்கைகளையும் அங்கு மேற்கொள்வதில்லை.
இந்த நிலையில், நல்லிணக்க அலுவலக அதிகாரியினால் கூறப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான கருத்து அடிப்படையற்றதும் உண்மைக்கு புறம்பானதுமான குற்றச்சாட்டு என்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாலியல் தொடர்பான விடயங்களுடன் சம்பந்தப்பட்ட இராணுவ அங்கத்தவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
1971ஆம் ஆண்டு நடைபெற்ற பிரேமாவதி மனம்பேரி கொலை, 1995 – 2006 ஆம் ஆண்டு இடையிலான காலப்பகுதியில் நடைபெற்ற கிரிஷாந்தி குமாரசுவாமி மற்றும் வேலாயுதம்பிள்ளை கொலை போன்ற சம்பவங்கள் தொடர்பில், சிவில் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு நடவடிக்கைகளின் போது நீதிமன்றத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை இராணுவம் வழங்கியிருந்தது.
இதனால் இங்கு மேற்படி சம்பவங்களுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு ஒழுக்கத்தை மீறும் இராணுவ அங்கத்தவர்களுக்கு எதிராக, சிவில் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்து, நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர்கள், இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தி இராணுவ சேவையிலிருந்து அகற்றப்படுவார்கள்.
எமது இராணுவம் இது போன்ற சிறந்த கொள்கைகளை பின்பற்றி வருகின்ற நிலையில், மேலே கூறப்பட்டுள்ள செய்தியானது, தற்போதைய அரசாங்கம் சட்ட ஆட்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நேர்மையுடன் முயற்சிக்கும் இக்காலக்கட்டத்தில் இராணுவத்தின் நற்பெயர் மற்றும் நல்லிணக்கத் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” என இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரெிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யுத்தம் காரணமாக பாதிப்புக்கு முகங்கொடுத்த தமிழ் பெண்கள், தற்போது அவர்களது சமூகம் மற்றும் படையினரின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தெரிவித்திருந்தது.
அரச சேவை பெற்றுக்கொடுக்கும் போது பாலியல் இலஞ்சம் கேட்கும் அதிகாரிகள் ஊடாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் பெண்களில், 37 வருட கால யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்கள் உள்ளதாக, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.