வடக்கிற்கு அதிகூடிய பலத்தை வழங்க அரசு நடவடிக்கை – மிகப்பெரிய போராட்டங்களை சந்திக்க நேரிடும்
வடக்கு மாகாணத்துக்கு தற்போது இருக்கும் பலத்தினை விட மேலும் அதிகூடிய பலத்தை வழங்கும் செயற்பாட்டிலேயே தற்போதைய அரசாங்கம் இருப்பதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களை நிறைவேற்றும் விதமாகவே இந்த விடயம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாட்டிற்கு அவரது கட்சியிலுள்ளவர்களின் எதிர்ப்பினையும் தேசிய அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்ப்புகளையும் சந்திப்பதுடன் நாடாளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பான பிரேரணை நிச்சயம் நிராகரிக்கப்படும் என அவர் கூறினார்.
இதேவேளை 2017ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டங்களை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
குறிப்பாக நாட்டில் உள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் உரிய முறையில் ஊதியம் கிடைக்கப்பெறாமையினால் ஊழியர்கள் மற்றும் அரச சேவையாளர்கள் அனைவரது ஈர்ப்பு போராட்டங்களையும் நிச்சயமாக சந்திக்க நேரிடும்.
இப்படியான நிலையில் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கு முற்பட்டால் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயமாக தோல்வியினை தழுவும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.