அணு ஆயுத தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு, உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், கிழக்காசிய நாடான, வடகொரியாவை சேர்ந்த, நான்கு கப்பல்கள், சர்வதேச துறைமுகங்களில் நுழைய, ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது.
கிம் ஜோங் – உன் தலைமையிலான, வடகொரிய அரசின், அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்பைக் கட்டுப்படுத்த, சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் அமெரிக்க நாட்டின் வற்புறுத்தலால், ஐ.நா., சபை மூன்று கட்டங்களில் தடை விதித்தது. அதில், அக்டோபரில், இரும்பு, நிலக்கரி, மீன்பிடி தொழில், ஜவுளி, எண்ணெய் வழங்கல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த அக்டோபரில், தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் நான்கு கப்பல்கள், அடையாளம் காணப்பட்டன. அந்த கப்பல்கள், சர்வதேச துறைமுகங்களில் நுழைய, ஐ.நா., பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது. வடகொரிய கப்பல்களுக்கு தடை விதிக்கப்படுவது, ஐ.நா., வரலாற்றில் இதுவே முதல் முறை.