வடகொரிய ஏவுகணைப் பரிசோதனை தோல்வி
வடகொரியாவின் வொன்சன் நகரில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று புதன்கிழமை காலை இந்த ஏவுகணை ஏவப்பட்டது. எனினும் குறித்த இலக்கை அது தாக்காததால் பரிசோதனை தோல்வியடைந்திருப்பதாக தென்கொரியா பாதுகாப்பு அமைச்சு அறிக்கை விடுத்துள்ளது. மேலும், வடகொரியா ஏவியது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, ஜப்பானில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்குவதற்கான பயிற்சியாக நான்கு நீண்ட தூரம் தாக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துப் பார்த்தது. இந்த முயற்சியின்போது, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் நேரடியாகக் கலந்துகொண்டார்.
இதில், மீளுபயோகப்படுத்தக்கூடிய ரொக்கெட் இயந்திரமும் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இயந்திரம் மூலம், இலகுவாக அடுத்தடுத்து ஏவுகணைகளைப் பொருத்தித் தாக்க முடியும்.
இத்தகவலானது, ஏவுகணைப் பயன்பாட்டில் வடகொரியா முன்னேறி வருவதையே காட்டுகிறது என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.