ஐபில் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துடுப்பெடுத்தாட தெரிவு செய்தது.
அதன்படி பெங்களூரு அணி தொடக்க வீரர்களாக விராட் கோஹ்லி, மந்தீப் சிங் ஆகியோர் களம் இறங்கினார்கள். மந்தீப் சிங் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கோஹ்லி 20 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஹெட் 12 ஓட்டங்களில் வெளியேற, டி வில்லியர்ஸ் 27 பந்தில் 43 ஓட்டங்களில் குவித்தார். கேதர் ஜாதவ், 28 ஓட்டங்களும், நெஹி 35 ஓட்டங்களும் எடுத்து கடைசி ஓவரில் வெளியேற, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.
மும்பை அணி சார்பில் மெக்கிளெனகன் 3 விக்கெட்டும், குருணால் பாண்டியா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி, ரோஹித் சர்மாவின் நிதாமான ஆட்டத்தால் 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணி வெற்றிப்பெற்றது.
அணித்தலைவர் ரோஹித் சர்மா 37 பந்துகளில் 1 சிக்சர், 6 பவுண்டரி விளாசி 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி தொடர்ந்து நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.