ரியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைக்க காத்திருக்கும் அகதிகள் அணி!
பிரேசிலின் ரியோடி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 10 பேர் கொண்ட அகதிகள் அணி முதன்முறையாக பங்கேற்கவுள்ளது.
இவ்வணி ஒலிம்பிக் சம்மேளனத்தின் கொடியின் கீழ் பங்கேற்கிறது. இவர்கள் ஒலிம்பிக் தொடக்க நாளின்போது சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் கொடியை ஏந்தி அணி வகுத்து வரவுள்ளனர்.
நான்கு நாடுகளைச் சேர்ந்த இந்த வீரர்கள், வீராங்கனை குறித்த விவரத்தை கடந்த யூன் மாதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
இவர்களது சாதனைக் கனவை நனவாக்க இவர்களுக்கு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் ஒலிம்பிக் கமிட்டி கொடுத்துள்ளது.
இப்படி ஒரு அணி பங்கேற்பது இதுவே முதன்முறையாகும் என்பதால் இவர்கள் வரலாறு படைக்க காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான தாமஸ் பேக் கூறுகையில், ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களாக பங்கேற்கும் அகதிகள் அணிக்கு இடம் தரப்பட்டுள்ளது.
இவர்களுக்கென்று நாடு இல்லை, அணி இல்லை, கொடி இல்லை, தேசிய கீதம் இல்லை. தற்போது உலகின் இதர வீரர்கள், வீராங்கனைகளுடன் இவர்களும் சமமாக கலந்துள்ளனர்.
இவர்கள் ஒலிம்பிக் கொடியை ஏந்தி அணிவகுத்து வருவர். இவர்களுக்காக ஒலிம்பிக் கீதம் இசைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அகதிகள் அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் விபரம்
- யுஸ்ரா மார்டினி (சிரியா)- நீச்சல் வீராங்கனை
- ரமி அனிஸ் (சிரியா)- நீச்சல் வீரர்
- யோனஸ் கிண்டே (எத்தியோப்பியா)- தடகள வீரர்
- யீச் புர் பியல் (தெற்கு சூடான்) – தடகள வீரர்
- பாலோ அமொடன் லொகொரொ (தெற்கு சூடான்)- தடகள வீரர்
- ஜேம்ஸ் நியாங் சியன்ஜியக் (தெற்கு சூடான்)- தடகள வீரர்
- லோக் நதிகே லோகோன்யென் (தெற்கு சூடான்)- தடகள வீராங்கனை
- ஏஞ்செலினா நடாய் லோஹலித் (தெற்கு சூடான்)- தடகள வீராங்கனை
- போபால் மிசங்கா (காங்கோ) – ஜூடோ வீரர்
- யோலன்டே புகாசா மபிகா (காங்கோ)- ஜூடோ வீராங்கனை