ரியோ ஒலிம்பிக்கில் அம்பலமான கொள்ளை நாடகம்: அமெரிக்க நீச்சல் வீரருக்கு 10 மாதம் தடை
சமீபத்தில் முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக நாடகமாடிய அமெரிக்க நீச்சல் வீரர் ரயான் லோக்ட் விளையாட 10 மாதகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவருடன் நாடகம் அரங்கேற்றிய மற்ற 3 வீரர்களுக்கும் 4 மாதங்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் லோக்ட் பங்கேற்க முடியாது என்று யு.எஸ்.ஏ. டுடே பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
இந்தத் தடை பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் விரைவில் தடையை உறுதி செய்யும் அறிக்கையை அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளியிடும் என்று தெரிகிறது.
12 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரயான் லோக்ட் இந்தச் செயல் காரணமாக பல ஸ்பான்சர்களை இழந்துள்ளார்.
அன்றைய தினம் அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் குடிபோதையில் எரிவாயு நிலையத்தில் நுழைந்து சூறையாடியுள்ளனர். இதனையடுத்து இவர்களை பிடித்து வைத்த பெட்ரோல் பங்க் பாதுகாவலர்கள் சேதாரத்திற்கு பணம் செலுத்திவிட்டு இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் பணத்தைக் கட்டிவிட்டு விடுபட்ட வந்த வீரர்கள் தங்களை துப்பாக்கி முனையில் வழிப்பறி கொள்ளை செய்ததாக அபாண்டக் குற்றம்சாட்டினர்.
இந்தக் குற்றச்சாட்டை அடுத்து பிரேசில் போலீசார் தீவிர விசாரணை நடத்த அமெரிக்க நீச்சல் வீரர்களின் நாடகம் தெரியவந்தது. அதாவது பெட்ரோல் நிலையத்தின் பாத்ரூமை இவர்கள் சூறையாடியது பாதுகாப்பு அமைப்பினரின் வீடியோவில் பதிவானது போலீஸால் ஆராயப்பட அதில், செய்த தவறுக்கு ஈடுகட்டுமாறு வலியுறுத்தியே பெட்ரோல் நிலைய காவலர்கள் இவர்களை பிடித்து வைத்ததும் பணத்தைக் கட்டிவிட்டு இவர்கள் வெளியேறியதும் தெரியவந்தது.
இவர்களது கொள்ளை நாடகம் பிரேசிலுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கொந்தளித்தனர்.
இந்நிலையில் தனது இந்த நடத்தைக்கு மன்னிப்பு கேட்ட லோக்ட், “இதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். நான் இந்த நிகழ்வை கொஞ்சம் அதிகமாக ஊதிப்பெருக்கி விட்டேன், அவ்வாறு செய்யவில்லையெனில் இன்று இந்தப் பிரச்சினை இந்த அளவுக்கு முற்றியிருக்காது” என்றார்.