ராகவனைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!
டந்த ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியில் அமைந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதி அவர்களின் தேர்தல் அலுவலகத்துக்கு றோணா அம்புறோஸ் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
றோணா அம்புறோஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவியாகவும் மத்திய அரசின் தற்காலிக எதிர்க்கட்சித் தலைவியாகவும் உள்ளார். மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியில் வாழும் பெருந்திரளான தமிழ் மக்களுடன் இதர பல்லின மக்களும் கூடி அவரை மகிழ்வோடு வரவேற்றனர்.
தேர்தல் அலுவலகத்தில் திரண்டிருந்து அவரை வரவேற்ற தொண்டர்கள், கலந்து சிறப்பித்த ஆதரவாளர்கள் மற்றும் 2018 இல் வரவிருக்கும் மானிலத் தேர்தலில் குதித்திருக்கும் அரசியல்வாதிகள் எனப் பலருடனும் உரையாடினார்.
லிபரல் கட்சியின் ஜநநாயகமற்ற நடைமுறை, வெளிப்படைத் தன்மையற்ற செயற்பாடு, இத்தொகுதி மக்களின் அபிலாஷைகளை நிராகரித்து திமிரோடு நடந்துகொள்ளும் கட்சித் தலைமை என்பனவற்றைக் கண்டித்துப் பேசிய றோணா அம்புறோஸ் இந்தத் தடவை அக் கட்சிக்கு தொகுதி மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியின் பிரதிநிதித்துவம் நீண்டகாலமாக லிபரல் கட்சியின் வசமே இருந்த போதும் அதன் நீண்டகால மூத்த உறுப்பினர் பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமாகியது.
அதே வேளை மார்க்கம் கல்விச் சபை உறுப்பினரும் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவருமான யுவனிதா நாதன் இப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தயாரக இருந்தபோதும் கட்சித் தலைமை ஜனநாயகமற்ற முறையில் தலைமை அலுவலகத்தில் பணி புரிந்த வேறொருவரை கட்சியி வேட்பாளராக்கியது.
இதனால் வேதனையுற்ற தமிழ்ச் சமூகத்தினர் இந்தத் தொகுதியில் தமிழர் ஒருவர் பாரளுமன்றத்துக்கு செல்லக்கூடிய வாய்ப்பை லிபரல் கட்சி தடுத்து விட்டது என்று கவலை கொண்டார்கள்.
இதன் விளைவால் பல தமிழ் அமைப்புக்களும், தலைவர்களும் சமூகமும் ஒன்றாக சேர்ந்து வந்து தமிழரான ராகவன் பரஞ்சோதியை வெற்றி பெற வைப்பதற்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள்.
இத் தேர்தலில் ராகவனின் வெற்றி சகல கட்சிகளுக்கும் ஒரு வலுவான செய்தியைச் சொல்ல வேண்டுமென்றும் அதே வேளை இதர கட்சிகளில் ஏற்கெனவே அங்கத்தவர்களாக இருப்பவர்களது கரங்களைப் பலப்படுத்த உதவுமென்றும் சமூக ஆர்வலர்கள் நம்புகிறார்கள்.