யுத்தக் குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை மைத்திரி நினைத்தாலும் தடுக்க முடியாது! – ஒப்பந்தம் போட்டதே அரசாங்கம் தான்
உள்நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்தை இலங்கை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது என என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர்,
இன்றைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் தூரநோக்கற்ற திட்டத்தினால் எமது இராணுவம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுஸைன் இலங்கைக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டார்.
அதுவும் முழுமையாக பக்கச்சார்பான விசாரணை நடவடிக்கையாகும். ஏனெனில் அவ்விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சாட்சிகள் தொடர்பில் அடையாளம் காட்டப்படவில்லை.
இதேவேளை அவர்கள் சம்பந்தமான தகவலை 30 வருடங்களுக்கு வெளியிடவும் முடியாது.
எனவே இவ்வாறான சாட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணைக்கிணங்க இலங்கைப் படையினர் பெருமளவிலான சிவில் தரப்பினரை கொலை செய்ததாகவும் சிவில் தரப்பினரை காணாமல்போகச் செய்ததாகவும் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகவும், வடக்கு மாகாண மக்களை கொலைசெய்வதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரனை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்தது.
எனவே அந்த பிரேரனையை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்து தமது யோசனையாக முன்வைத்ததுடன் அதற்கு ஆதரவு வழங்குமாறு ஏனைய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆகவே அப்பிரேரனை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரேரனையின் ஆறாம் உறுப்புரையில் இலங்கை படையினருக்கு எதிராக உள்ள யுத்தக் குற்ற விசாரணை செய்வதற்காக பொதுநலவாய அமைப்புகளின் நீதிபதிகள் உள்ளடங்கலாக சர்வதேச நீதிபதிகளை கட்டாயமாக நியமிக்க வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டு வருகின்றார்.
இவ்வாறு அவர் தற்போது அதனை நிராகரித்தாலும் அவருடைய அரசாங்கம்தான் சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்தை சர்வதேசத்திற்கு எழுத்துமூலம் தெரிவித்துள்ளது.
ஆகவே சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதியை மீறுவதற்கு அவருக்கோ அல்லது அவருடைய அரசாங்கத்திற்கோ இயலாத விடயமாகும்.
தற்போது மற்றுமொரு பயங்கரமான விடயம் நடந்தேறியுள்ளது. அதாவது இலங்கை அரசாங்கம் நியமித்த நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி தயாரித்துள்ள அறிக்கையில் சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் தேவை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அதனை நிராகரித்துள்ளபோதும் அரசாங்கம் நியமித்த செயலணி தனது அறிக்கையினை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது என்றார்.