யுத்தக்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்! ஐ.நா செயலாளர்
தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் முடிவில், வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய மூன் இக் கருத்தைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்துப் பேசிய அவர், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தான் விஜயம் செய்தபோது இருந்த நிலைக்கும் தற்போதுள்ள நிலைக்கும் பெருத்த மாற்றம் இருப்பதாகவும், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது, பல்வேறு முன்னேற்றங்களைப் பார்க்கிறேன். முன்பு பெருமளவில் முகாம்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள், தற்போது அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் உத்வேகத்துடனும், திறன் படைத்தவர்களாகவும் உள்ளனர் என்றார்.
தற்போது, நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்று தெரிவித்த அவர், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் அமைக்கும் நடவடிக்கைகளையும் பாராட்டினார்.
போரின் இறுதிக் கட்டத்தின்போது, ஐ.நா. மன்றம் அக்கறை காட்டவில்லை என்பதை அவர் மீண்டும் ஒப்புக்கொண்டார்.
போரின் இறுதிக் கட்டத்தில், ஐ.நா. மன்றம் அக்கறை காட்டவில்லை. அது தவறு செய்து விட்டது என்பது உள்ளக விசாரணையில் தெரியவந்தது.
அதனால்தான், மக்களின் வாழ்க்கை, மனித உரிமைகள் முக்கியமானவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்.