யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயற்கையின் எச்சரிக்கை..!
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அடுத்து வரும் சில சில வாரங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லி மீட்டர் வரையான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வடகிழக்கு, கிழக்கு பகுதிகளில் கடுமையான இடி மற்றும் மின்னல் காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாந்தோட்டை தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பகுதியும், புத்தளம் தொடக்கம் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதியும் கடும் கொந்தளிப்பாக காணப்படும்.
காற்றின் வேகமானது மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வரை அதிகரிக்கக் கூடும். மாலை நேரங்களில் திடீர் சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் ஏற்பட்ட நடா புயலை அடுத்து வடக்கு மாகாணத்தில் வெப்பநிலை சடுதியாக 6 பாகை செல்சியஸ் வரை குறைந்துள்ளது. இதனால் வைரஸ் நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன.
இதேவேளை, நாடா புயல் தாக்கம் காரணமாக வடக்கில் 57 குடும்பங்களை 150க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.