ஷலில முணசிங்கவால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடிக்கும் தமது நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, லிற்றோ கேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தமது நிறுவனத்தின் வர்த்தகப் பங்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தௌிவுபடுத்தும் வகையில் அவர்களால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் ரூபா நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க நேற்று கைதுசெய்யப்பட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட தாய்வான் வங்கியின் கனணியை ஹக் செய்ய உதவியதாக கூறப்படும் இருவரை இலங்கை பொலிஸார் கைதுசெய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இந்த மோசடியுடன் தமது நிறுவனத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும், தாம் இது குறித்து முன்னதாக அறிந்திருக்கவில்லை எனவும், லிற்றோ கேஸ் நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.