முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக்கட்சியுடனே இருப்பதாக ஒன்றிணைந்த எதிரணியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ள மேல்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சகாவுல்லா தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிரணி தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது என்று குறிப்பிட்ட அவர்,மேலும் பல மாகாண சபை உறுப்பினர்கள் சு.கவில் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார். சு.க தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதியுடன் இருந்த முஸ்லிம்கள் அவரிடமிருந்தும் தூரமானார்கள். அவரை நல்வழிப்படுத்த நாம் பல முயற்சிகள் எடுத்தோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைக்க பெருமுயற்சி எடுத்ததாகவும் தம்மை பெரிய மனிதர்களாக கருதும் சிலர் அதனை குழப்பினார்கள்.
முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி செவிசாய்த்து தீர்த்து வைப்பார் என முழுமையாக நம்புகிறோம். எந்த வித சலுகைகளோ பட்டம் பதவிகளையோ எதிர்பார்க்காமலே ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதியையும் இணைக்க முயற்சிகள் நடந்தாலும் சில சதிகார கும்பல்கள் அதனை குழப்பினார்கள். இதனால் தொடர்ந்து சு.கவில் இணைந்திருந்து முஸ்லிம் மக்களின் ஆதரவை சு.கவுக்குப் பெற்றுக் கொடுக்க முடிவு செய்தேன். சு.க தலைவராக யார் வந்தாலும் நான் எனது ஆதரவை வழங்குவேன்.
என்னை நீர்கொழும்பு சு.க இணை அமைப்பாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார். நான் சலுகைகளை எதிர்பார்த்து இணைந்திருந்தால் 2015 இலே இணைந்திருப்பேன்.
மஹிந்த ராஜபக்ஷவை வெல்ல வைக்கவே நாம் உழைத்தோம் .திடீரென அவரை விட்டு வர முடியாது. அவரை சரியான வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்தோம்.