தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான நவீன் சந்திரா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லெவன்’ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதியன்று வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, சஷாங்க், அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன், ரவி வர்மா, அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் திரையரங்குகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்படம் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதியன்று உலகம் முழுதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.