மே.இ.தீவுகள் வீரர்களுக்கு ‘சர்’ பட்டம் கொடுப்பது பற்றி நிறவெறித்தனமான கருத்து ஒன்றைக் கூறியதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் பாய்காட்.
ட்விட்டரில், “என்னுடைய கருத்து ஏற்கமுடியாதது, மிகவும் தவறானவை” என்று வருந்தியுள்ளார்.
மேலும், “ஒரு கூட்டம் ஒன்றில் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு நான் அளித்த பதில் எனக்கே ஏற்புடைமை இல்லை. நான் யாரையும் புண்படுத்த அவ்வாறு கூறவில்லை ஆனால் நிச்சயமாக, தெளிவாக என் கருத்துகள் தவறானவை. எனவே நான் முழுதும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மே.இ.தீவுகள் கிரிக்கெட்டை என் வாழ்நாள் முழுதும் நான் நேசித்துள்ளேன், அந்த வீரர்கள் மீது அளப்பரிய மதிப்பு வைத்துள்ளேன்” என்றார்.
பாய்காட் கூறிய ‘நிறவெறி’ கருத்து என்ன?
சமீபத்தில் எட்ஜ்பாஸ்டனில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது கேள்வி பதில் அமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விவ் ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆகியோருக்கு வீரத்திருமகன் தகுதி வழங்கப்பட்டு அவர்கள் பெயர் முன் ‘சர்’ என்ற அடைமொழியைப் பயன்படுத்திக் கொள்ள மரியாதை செய்தது பற்றி கேள்வி எழுப்பிய போது, மே.இ.தீவுகள் வீரர்களுக்கு இது பளபளப்பான கலர் காகிதங்களைச் சொரிவது போன்றதாகும் என்று கூறிய பாய்காட், ‘எனக்கு இருமுறை மறுக்கப்பட்டது, ஒருவேளை நான் என் முகத்தை கறுப்பாக்கிக் கொண்டிருந்தால் கிடைத்திருக்கலாம்’ என்றார்.
இதுதான் ‘நிறவெறி’ கருத்து என்று கடுமையாகச் சாடப்பட்டது, பாய்காட் மன்னிப்புக் கேட்டார்.