‘மெர்சல்’ தெலுங்கு பதிப்பான ‘அதிரந்தி’ படத்தின் தணிக்கை சர்ச்சை முடிவுக்கு வந்தது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.
‘மெர்சல்’ தெலுங்கு பதிப்பான ‘அதிரந்தி’ திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டது. அக்டோபர் 27-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் அதிகாரிகள் ‘அதிரந்தி’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை.
ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் இருப்பதால்தான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தணிக்கைக் குழு தலைவர் ப்ரஷன் ஜோஷி உள்ளிட்ட பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது ‘அதிரந்தி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. இதற்கான சான்றிதழையும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கிவிட்டார்கள். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.