தன்மீதான கிரிமினல் குற்ற வழக்குகளை சந்திக்க திராணி இல்லாமல் வெளிநாட்டில் பதுங்கி வாழும் முஷாரப் ஒரு மிகப்பெரிய கோழை என பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார்.
கடந்த 1999-ம் ஆண்டு பாக். ராணுவ ஜெனரலாக இருந்த பர்வேஷ் முஷராப், 75 , அப்போதைய பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்ந்துவிட்டு ராணுவ ஆட்சியை கொண்டு வந்தார் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகார ஆட்சி நடத்தினார். தனது ஆட்சியின் போது பாக். அரசியலமைப்பு சட்டத்தை மீறி நெருக்கடி நிலைமை கொண்டு வந்தது. முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் இவர் மீது கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.கடந்த 2013-ம் ஆண்டு உடல் நலகுறைவால் சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெற்று துபாய் சென்றார். அங்கிருந்தபடி அரசியல் செய்து வருகிறார்.
இது குறித்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியது, பாக்.கில் ஏராளமான கிரிமினல் குற்றவழக்குகளை சந்திக்க திராணி இல்லாமல், கோர்ட் தீர்ப்பில் மரண தண்டனை கிடைத்துவிடும் என அஞ்சியே வெளிநாடு தப்பிச்சென்று துபாயில் பதுங்கி வாழும் முஷாரப் ஒரு மிகப்பெரிய கோழை, அவரை நீதிமுன்பாக கொண்டுவந்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.