முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தல் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நாளில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருகைத் தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தை நடைமுறை படுத்தவுள்ளதாக அறிகின்றோம்.
இந்நிலையில் ஜனாதிபதி இந்த நிகழ்வுக்கு வர கூடாது. அதனையும் மீறி வந்தால் பாரிய எதிர்ப்பினை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவார்கள்.
மேலும் தேசிய வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்க முடியும் என்றால் ஏன் நாம் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைவு கூர இயலாது? எனவும் அவர் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்களுடைய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்கள் குறித்த தினத்தில் ஜனாதிபதி வருகை தராமல் வேறொரு தினத்தில் வருமாறு ஊடகங்கள் வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழினப் படுகொலை இடம்பெற்ற இந்த துக்ககரமான நாளில் நாங்கள் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிப்பதற்கு ஊறு விளைவிக்காமல் ஜனாதிபதி தனது விஜயத்தை ஒத்தி வைக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் மமதையாக அன்றைய தினம் இந்த நிகழ்வை நடாத்தினால் முல்லைத்தீவு நகரம், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் என்பன போராட்டக் களமாக மாற்றப்படும்.
தமிழினப் படுகொலையின் உச்சக்கட்டமாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனவழிப்பு நாளான மே 18ஆம் திகதியை கடந்த ஏழு வருடங்களாக தமிழினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து வருகிறது.
இந்த ஆண்டும் தாயகத்திலும், தாய்த் தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களில் முழு அளவிலான நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு வருடங்களாக முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரம் மே 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிப்பதற்குத் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
எதிர்வரும் 12ஆம் திகதி செம்மணி மயான பூமியில் விளக்கேற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும். 13ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்க உத்தேசித்துள்ளோம்.
வட்டுக் கோட்டை தீர்மானம் எடுக்கப்பட்ட வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த எதிர்வரும் 14ஆம் திகதி காலை அன்றைய நாள் நினைவு கூரப்பட்டு, அதனைத் தொடர்ந்து நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலய வளாகத்தில் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெறும்.
1985ஆம் ஆண்டு நெடுந்தீவிலிருந்து குமுதினிப் படகில் வந்த ஆறு மாதக் குழந்தை உட்பட பொதுமக்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக எதிர்வரும் 15ஆம் திகதி நெடுந்தீவில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
16 மற்றும் 17ஆம் திகதிகளில் வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறும்.
18ஆம் திகதி காலை முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.