முத்தையா இயக்கத்தில் சூர்யா: உருவாகும் புதிய கூட்டணி
விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க, முத்தையா இயக்கத்தில் வெளியான படம் ‘மருது’. இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தை அன்புச்செழியன் தயாரித்திருந்தார். இப்படத்துக்கு எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இப்படத்தைத் தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் முத்தையா. இதற்காக அலுவலகம் எல்லாம் போட்டு கதை எழுதி வருகிறார்.
முத்தையா இயக்கத்தில் உருவாகும் இப்படமும் உறவுகள், மண் சார்ந்த களம் என்று அவரது முந்தைய பட பாணியில் அமைய உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கதையாக்க பணிகளை முடித்துவிட்டு செப்டம்பர், அக்டோபரில் படப்பிடிப்பு நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
இக்கதையில் சூர்யா நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ‘சிங்கம் 3’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, முத்தையா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. விரைவில் இப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.