ஓமனில் வாழும் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள தனது மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் என்று கூறியுள்ளதை அடுத்து அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உதவியை நாடியுள்ளார்.
கடந்த 2008-ஆண்டு ஓமனை நாட்டைச் சேர்ந்த ஜஹ்ரான் ஹமீது அல் ராஜீ என்பவருக்கும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த கௌசியா பேகம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் கௌசியா, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் கடந்த 2008-ஆம் ஆண்டு ஓமனை சேர்ந்த ஜஹ்ரான் ஹமீது அல் ராஜீ என்பவரை திருமணம் செய்து கொண்டேன்.
என்னுடைய உறவினர்களால் ஜஹ்ரானுக்கு 7 பெண்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டன. அதில் அவர் என்னை தேர்வு செய்து எனது பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.கடந்த சில மாதங்களாக ஜஹ்ரான், எனக்கு முறையாக செலவுக்கு பணம் அளித்து வந்தார். ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வருகை தந்து என்னை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி எனக்கு ஓமனில் இருந்து கணவர் போன் செய்துவிட்டு மூன்று முறை தலாக் கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் எனது செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. எனது தந்தை அண்மையில் இறந்துவிட்டார். என்னையும் தாயையும் கவனிக்க யாரும் இல்லை. முத்தலாக் குறித்து எனக்கு திருமணம் செய்து வைத்த எனது உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் என்னிடம் கடுமையாக பேசிவிட்டு வேறு ஒரு அரபு நாட்டினரை திருமணம் செய்து கொள் என்கிறார்கள்.
எனவே எனது கணவர் குறித்து ஓமன், மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் விசாரணை நடத்தி எனது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார். முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.