நாக்பூரில் நடந்துவரும் இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் அஷ்வின் – ஜடேஜா சுழல் கூட்டணி அசத்தினர்.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை முதல்நாளில் பந்துவீசுவதை சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. புதிய பந்து வேகத்துக்கே ஒத்துழைக்கும் என்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் முதல்நாளில் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொள்வர். ஆனால், நாக்பூரில் நடந்தது அஷ்வின் – ஜடேஜாவுக்கு புது தெம்பை அளித்திருக்கிறது எனலாம். இலங்கை பேட்டிங் ஆர்டரை பதம்பார்த்த இந்த கூட்டணி, மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்த அந்த அணி 205 ரன்களில் ஆட்டமிழந்தது. அதுவும், சமீபகாலமாக இந்திய அணியில் இடம்கிடைக்காமல் தடுமாறிய இந்த கூட்டணிக்கு நாக்பூரின் முதல்நாள் ஆட்டம் புத்துணர்வை அளித்துள்ளது. கொல்கத்தா டெஸ்டில் பெரிதாக சோபிக்காத நிலையில், அதேபோன்ற தன்மைகொண்ட மைதானத்தில் சாதித்திருக்கிறது இந்திய அணியின் நட்சத்திர சுழற்கூட்டணி.
போட்டிக்குப் பின்னர் பேசிய ஜடேஜாவின் முகத்தில் அந்த மகிழ்ச்சியை நம்மால் காணமுடிந்தது. ஓவர் டு ஜடேஜா, ‘முதலில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பக்கபலமாக பந்துவீசுவதே எங்கள் (சுழற்பந்து வீச்சாளர்கள்) திட்டமாக இருந்தது. கட்டுக்கோப்பாக பந்துவீசி, எதிரணி பேட்ஸ்மேன்கள் எளிதாக பவுண்டரிகள் மூலம் ரன்கள் குவிக்கக் கூடாது என்ற நோக்கத்துடனே நாங்கள் பந்துவீசினோம். ஆடுகளமும் சுழலுக்கு பெரிதாக ஒத்துழைக்காத சூழலில், புதிதாக சிந்தித்து, அதை செயல்படுத்துவதே சிறந்தது. இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னாப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் எனது திறமையை நிரூபிப்பேன். வெளிநாட்டு ஆடுகளங்களிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களால் சாதிக்க முடியும்’ என்றார்.