பிரதமர் நரேந்திர மோடியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3–வது முறையாக இன்று சந்தித்து பேசுகிறார்.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே பிரதமரை சந்திப்பதிலும் ஒருவித போட்டி நிலவுவதாகவே தெரிகிறது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மோடி பக்கபலமாக இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மோடியுடனான நெருக்கத்தில் குறைவில்லை என்பதை காட்டும்விதமாக சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சந்திப்பு நடந்தது.
இன்று சந்திக்கிறார்
இந்த நிலையில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திப்பதற்காக நேற்று இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி வந்தார். இரவில் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்தார். அவர் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணிக்குள் பிரதமரை சந்திக்க இருக்கிறார்.
முதல்–அமைச்சரான பிறகு எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திப்பது இது 3–வது முறையாகும். முதல் முறையாக கடந்த பிப்ரவரி 27–ந் தேதியும், 2–வது முறையாக ஏப்ரல் 23–ந் தேதியும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் தங்கமணி மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் டெல்லி வந்தனர்.
ஜனாதிபதி தேர்தல்
கடந்த முறை நடந்த சந்திப்புக்கு பிறகே, அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, டி.டி.வி.தினகரன் கைது போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால் தமிழக அரசு தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டது. மத்திய அரசுக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா கட்சி நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய அ.தி.மு.க. அம்மா அணியின் ஆதரவை பா.ஜனதா நாடலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், கேட்காமலேயே ஆதரவு அளிக்கும் சூழ்நிலையில்
அ.தி.மு.க. அம்மா அணி இருப்பதாக தெரிகிறது.
இப்படி ஒரு பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழகத்தில் உள்ள வறட்சி நிலை குறித்தும், வறட்சி உள்ளிட்ட பிற தேவைகளுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என தெரிகிறது.