முச்சதம் விலாசிய வீரர் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல்!
வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயருக்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காள தேச அணி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக கருண் நாயர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிராக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே விரல் காயம் காரணமாக ஆடவில்லை. இதனையடுத்து கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டு சென்னையில் நடந்த கடைசி போட்டியில் அவர் அதிரடி முச்சதத்தை அடித்தார் என்பது நினைவுக் கூரதக்கது.
முன்னதாக பயிற்சியாளர் கும்ப்ளே கூறியதாவது, கருண் நாயர் தனது வாய்ப்பை நன்றாகப் பற்றிக் கொண்டார், சென்னையில் அவர் முச்சதம் அடித்தது அருமையானதுதான், ஆனால் ரஹானே அணிக்கு செய்ததை மறுக்க முடியாது என்று சூசகமாக தெரிவித்திருந்தார்.
அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியதாவது, ஒருவரது ஓரு போட்டி ஆட்டம், மற்றொரு வீரரின் 2 ஆண்டுகால கடின உழைப்பை மறைத்து விடாது. கடந்த 2 ஆண்டுகளாக ரஹானே இந்திய அணிக்கு செய்ததை நாம் மறக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் முச்சதம் விலாசிய கருண் நாயர் காயம் காரணமாக வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ரஹானே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.