வடக்கு மாகாணத்தில், விலைமானி (மீற்றர்) மூலம் முச்சக்கர வண்டிகள் கட்டணத்தை அறவிடும் நிலை வடக்கு மாகாணத்தில் எந்த ஓர் இடத்திலும் சீர் செய்யப்படவில்லை என வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
சபையின் பேரவைச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சபையின் அமர்விலேயே வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:
ஒரு கிலோ மீற்றர் தூரத்தைத் தாண்ட ஒரு மணிநேரம் செல்லும் நெருக்கடிமிக்க கொழும்பு மாவட்டத்திலேயே ஒரு கிலோ மீற்றருக்கு பகலில் 50 ரூபா மற்றும் இரவில் 57 ரூபா 50 சதம் என்ற நிர்ணயிக்கப்பட்ட விலைமானி மூலம் மட்டுமே நீண்டகாலமாக முச்சக்கர வண்டிகள் கட்டணத்தை அறவிடுகின்றன. ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிலை காணப்படவில்லை.
இது தொடர்பில் மாகாணப் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தவேண்டும்.
முச்சக்கர வண்டிச் சாரதிகளின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதைவிட முக்கிய மானது நுகர்வோரின் தேவை தொடர்பானது. எனவே கண்டிப்பாக வடக்கு மாகாண போக்குவரத்து நியதிச் சட்டத்தின் கீழ் இதனைச் சீரமைக்க வேண்டும்.
இதேநேரம் யாழ்ப்பாண மாவட்டச் செயலர் இது தொடர்பில் கடந்த ஆண்டே நடவடிக்கை எடுக்க முற்பட்டு அதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.
குறித்த விடயம் தற்போது மாகாண சபைக்கு உட்பட்டது என்ற வகையில் அதற்கான ஏற்பாடுகளை மாகாண சபை மேற்கொள்ளும் என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மாவட்டச் செயலாளருக்கு எழுத்தில் அறிவித்த காரணத்தால் மாவட்டச் செயலாளர் மேற்கொண்ட பணியைக் கைவிட்டிருந்தார்.
இருப்பினும் மாகாண போக்குவரத்து அமைச்சும் கடிதம் எழுதி ஓர் ஆண்டு கடந்து விட்டபோதும் எதுவும் இடம்பெறவில்லை.
இதனால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் 100 ரூபாவுக்குச் செல்லும் தூரத்திற்கும் 300 ரூபா கோரும் நிலமையே காணப்படுகின்றது. அதேவேளை பயணிகளின் முகத்திற்கு ஒரு கட்டணத்தை யும் அறவிடுகின்றனர்.
இதனால் இது தொடர்பில் மாகாண போக்குவரத்து அமைச்சு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓர் அவசர கவனவீர்ப்புப் பிரேரணையை முன் வைத்தார்.