மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்
மீள்குடியேற்றம் தொடர்பான விசேட செயலணி வட மாகாண சபையின் ஆலோசனையை பெற்றுக்கொண்டே செயற்படும் அதேவேளை, அமைச்சரவை தீர்மானத்திற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள இச்செயலணியில் வட மாகாண முதலமைச்சர் இணைத்துக்கொள்ளப்படமாட்டார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வன்னி மாவட்ட எம். பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் இது தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரின் பதிலைப் பெற்றுக் கொள்வதற்கான கேள்வி நேரத்தின் போது வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பியான சார்ள்ஸ் நி்ர்மலநாதன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.
மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மூவர் இடம்பெறுகின்றனர். அவர்களோடு இச் செயலணியில் நான்காவதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியுமா என வினவினார்.
மேற்படி செயலணியில் வட மாகாண முதலமைச்சர் இடம்பெறாமை வட பகுதி மக்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பில் வட மாகாண சபையில் அண்மையில் யோசனை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை; தற்போது நியமிக்கப்பட்டுள்ள செயலணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் போல் செயற்பட்டவரும் பல குற்றச்சாட்டுக்களுக்கு உட்பட்டுள்ளவருமான ரிஷாட் பதியுதீன் இடம்பெறுகிறார்.
இது வடக்கு மக்களுக்கு பெரும் சந்தேகத்தையும் விரக்தியையும் தோற்றுவித்துள்ளது. இந்த நிலை பிரிவினைவாதமாக மாறக்கூடும்.
வடக்கின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக செயற்பாடுகள் முன்னெடுக்கும் போது அது வட மாகாண சபையின் பங்கேற்போடு இடம்பெறுவது முக்கியம்.
அந்த வகையில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அந்த செயலணியில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லையேல் கடந்த மஹிந்த ராஜபக்ச காலம் போல் செயற்பட விரும்பினால் செயற்படுங்கள் பரவாயில்லை என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.