‘‘ஐ.பி.எல்., போட்டிக்கு கிறிஸ் கெய்ல் திரும்பி இருப்பது எதிரணிக்கு சிக்கல் தான்,’’ என, பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.
மொகாலியில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கிறிஸ் கெய்ல் (63 ரன், 33 பந்து) அதிரடியாக ரன் சேர்க்க, பஞ்சாப் அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 197 ரன்கள் குவித்தது. சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு கேப்டன் தோனி (79 ரன், 44 பந்து) கைகொடுத்த போதும், 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 193 ரன்கள் மட்டும் எடுத்து, 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதுகுறித்து பஞ்சாப் அணியின் துவக்க வீரர் லோகேஷ் ராகுல் கூறியது: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இப்போட்டி மூலம் கிறிஸ் கெய்ல், மீண்டும் ஐ.பி.எல்., தொடருக்கு திரும்பி இருப்பது பஞ்சாப் அணிக்கு சாதகமான விஷயம். ஆனால் இது, எதிரணிக்கு நல்லதல்ல. ஏனெனில் தனிநபராக அணிக்கு வெற்றி தேடித்தரும் தகுதி இவரிடம் உள்ளது. இது, அனைவருக்கும் நன்கு தெரியும். இவரது ‘பார்ம்’ அடுத்து வரும் போட்டிகளிலும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
இம்முறை ஐ.பி.எல்., தொடருக்கு ஒவ்வொரு அணியிலும் திறமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். எங்களை பொறுத்தவரை, எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. பயிற்சியின் போது உருவாக்கும் திட்டங்களை சரியாக பயன்படுத்தி, துவக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கின்றோம்.
கடைசி ஓவரில் சென்னை அணி கேப்டன் தோனிக்கு, ‘வைடு யாக்கர்’ வீச திட்டமிட்டோம். ஏனெனில் இவர் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அடித்து விளையாட சிரமமாக இருக்கும். இந்த ஓவர், எங்கள் அணி பவுலர்களுக்கு சிறந்த பாடமாக அமைந்தது. மற்ற போட்டிகளிலும் பவுலர்கள் திட்டமிட்டு செயல்பட்டால், எதிரணியின் ரன் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இவ்வாறு லோகேஷ் ராகுல் கூறினார்.