அரசியல் செயல்பாடுகளில் நேரெதிராக செயல்பட்டு மது ஒழிப்பு விவகாரத்தில் மட்டும் ஒரே பாதையில் திமுகவும், பாமகவும் கூட்டணி அமைத்து செயல்பட முடிவெடுத்துள்ளன.
தேர்தல் நேரத்தில் பல்வேறு சமயங்களில் ஒன்றாக பயணித்த கட்சிகள் திமுகவும், பாமகவும். தற்போது அரசியல் களத்தில் நேரெதிர் பாதையில் பயணிக்கும் இரு கட்சிகளும், மது ஒழிப்பு விவகாரத்தில் ஒரே பாதையில் பயணிக்க முடிவெடுத்துள்ளன.
சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் பட்சத்தில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று பாமக தெரிவித்துள்ளது.
அதற்கு திமுகவின் உதவியையும் பாமக நாடியுள்ளது. இதுதொடர்பாக பாமக வழக்கறிஞர் கே.பாலு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய அக்கடிதத்தில், மது ஒழிப்பிற்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மூட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டி பேசிய ஸ்டாலின், மது உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு மாநில அரசு ஒருபோதும் கருணை காட்டக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.