இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி இணைந்த படங்களான ‘துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி’ ஆகிய படங்களின் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் யுவன், தனுஷ், நா. முத்துக்குமார் கூட்டணி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
‘யாரடி நீ மோகினி’ படங்களுக்குப் பிறகு சுமார் 10 வருடங்களாக தனுஷ், யுவன் இருவரும் இணைந்து ஒரு படம் கூட செய்யவில்லை. அந்தக் கூட்டணியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதன் பின் தனுஷ், அனிருத்துடன் இணைந்து பயணித்தார். கடந்த சில படங்களாக அவரையும் பிரிந்து ஷான் ரோல்டன்-ஐ அவர் படங்களுக்கு இசையமைக்க வைத்தார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்தப் படத்தில் மீண்டும் அனிருத் இசையமைப்பாரா என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். ஆனால், தனுஷ் மீண்டும் யுவனுடன் சேர உள்ளார் என்று தகவல் வெளியானது. நேற்று அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன் கூட்டணி இணைந்துள்ளது அவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.