மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகள் விதிக்கபட்ட சிறைதண்டனைக் காலம் நிறைவடைந்தும் விடுவிக்கப்படாத முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கைதிகளின் கோவை ஆவணங கள் மாலைதீவு மொழியில் இருப்பதனாலேயே விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதனால் மொழிபெயர்ப்பிற்காக வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பியுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் பதிலளித்ததாக தமிழ்த் தேசயக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது;
மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை அரசிடம் வழங்கிய மூன்று அரசியல் கைதிகளின் தண்டனைக் காலம் நிறைவுற்றுள்ளது. அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த ஜூன் மாதம் குறித்த அமைச்சுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதாவது கடந்த 2007ஆம் ஆண்டு -மே 18ஆம் திகதி மாலைதீவுக் கடற் பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் முல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மாலைதீவு அரசால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அந்த நாட்டுப் பொலிசார் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தனர்.
அவ்வாறு தொடுத்த வழக்கில் நீதிமன்று மூவரையும் குற்றவாளிகள் எனக் கண்டு அதற்காக 15 ஆண்டுகால சிறைத் தண்டனையை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டது. அத்துடன் கைதிகள் தண்டனையை இலங்கைச் சிறையில் அனுபவிக்கலாம் என்றும் தெரிவித்த மன்று அவர்களை இலங்கை அரசிடம் கைளயிக்குமாறும் கோரியது. இதன்படி மாலைதீவு கடலில் கைது செய்யப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த மூவரையும் மாலைதீவு நாட்டு அரசு உத்தியோக பூர்வமாக இலங்கை அரசிடம் கையளித்தது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட கைதிகள் மூவரும் இன்றுவரை இலங்கையின் சிறைகளிலேயே தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாலைதீவு அரசினதும் இலங்கை அரசினதும் கணக்கின்படி ஓர் ஆண்டு சிறை தண்டனை என்பது தொடர்ச்சியாக அனுபவிப்பதாயின் 8 மாதங்களும் 10 நாள்களும் மட்டுமே ஆகும். எஞ்சிய நாள்கள் விடுமுறைக் கழிவாகவே கருதப்படுகின்றது. அதன்படி 2007ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையில் தொடர்ச்சியாக சிறையில் வாடும் குறித்த மூன்று இளைஞர்களினதும் 15 ஆண்டுகளுக்கான காலம் கடந்த மே மாதமே நிறைவு பெற்றுள்ளது.
எனவே அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கைதிகளின் பெற்றோர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையினை நான் எழுத்து மூலமாகக் கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி சிறைச்சாலைகள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அநதக் கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோருடன் கலந்துபேசி விரைவில் பதிலளிப்பதாக அமைச்சர் அன்று தெரிவித்திருந்தார். ஆனால் மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் குறித்த மூவரும் விடுதலை செய்யப்படாதமை தொடர்பில் மீண்டும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
இதன்போது குறித்த 3 கைதிகளின் கோவைகளும் மாலைதீவு நாட்டின் மொழியில் உள்ளதனாலேயே விடுவிப்பு தாமதம் அடைவதனால் அவர்களின் கோவையை மொழி பெயர்த்து வழங்குமாறு அயலுறவு அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . கோவை மொழி பெயர்ப்பு வந்த்தும் பரிசீலித்து அந்த விபரங்கள் சரியாயின் விடுவிக்க முடியும் என அமைச்சர் சுவாமிநாதன் நேரடியாக தெரிவித்துள்ளார். எனத் தெரிவித்தார்.-