மாயமான விமானத்தில் இருந்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல்
சென்னையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ ஏ.என்.32 என்ற விமானம் மாயமானது. இதில் பயணம் செய்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தாம்பரம் விமானபடைத் தளத்தில் இருந்து இன்று காலை அந்தமானின் போர்ட் பிளேருக்கு புறப்பட்ட விமானத்தை காணவில்லை. ஏ.என்.32 என்ற அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது காலை 8.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
தகவல் துண்டிக்கப்பட்டதை அடுத்து, பதட்டமடைந்த அதிகாரிகள், விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.
விமானத்தை தேடும் பணியில் மேலும் 4 டார்னியர் ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அந்த விமானத்தில், 6 விமானிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 4 பேர் பயணித்துள்ளனர். 11 விமானப்படை அதிகாரிகள், 8 கடற்படை வீரர்களும், மாயமான விமானத்தில் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மாயமான விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சம்பா மூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, சின்னா ராவ் உள்ளிட்ட 8 பேர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை வைத்து பார்க்கும்போது அது நொறுங்கி விழுந்திருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.
எனவே சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.