மாயமான மலேசிய விமானம் : ஒரு வழியாக விடை கிடைத்தது
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் 227 பயணிகளும், 12 விமான பணியாளர்களும் இருந்தனர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நடுவானில் மாயமானது.
அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் எந்த தகவலும் கிடைக்காததால், விமானத்தை தேடும் பணி சமீபத்தில் நிறைவு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த விமானம் இந்தியப்பெருங்கடலில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஆனால் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 135 மில்லியன் டாலர் (சுமார் ரூ.905 கோடி) செலவில் தேடும் பணி நடந்தும், அந்த விமானத்தைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த விமானத்தில் இருந்து பெறப்பட்ட சிக்னல்களை ஆஸ்திரேலியாவை சேர்ந்த வல்லுனர்கள் ஆராய்ந்தனர். அதில் அந்த விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, அது நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி என்ற வேகத்தில் தொடங்கி அதிவேகமாக கடலில் விழுந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
அந்த விமானம் கடைசி நேரத்தில் செயற்கைக்கோள்களுடன் தானியங்கி பரிமாற்ற சிக்னல்களை பல முறை செய்திருக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது. இந்த சிக்னல்களில் இருந்து, அந்த விமானம் தற்போது தேடல் பணி நடந்து வருகிற 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில்தான் விழுந்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் தலைமை கமிஷனர் கிரேக் ஹ¨ட் கூறி உள்ளார்.