மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் மிக அரிதாகவே காணப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது காணப்படவில்லை. என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தல் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிற்போடப்பட்டது. பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிராக காணப்பட்டது.
அரசியல் நோக்கத்திற்காக காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். மாகாண சபை தேர்தலை எத்தேர்தல் முறையில் அதாவது பழைய தேர்தல் முறையிலா அல்லது புதிய தேர்தல் முறையிலா நடத்துவது என்ற சிக்கல் நிலை காணப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை காணப்பட்டது.
மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போட வேண்டும் என்ற தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. ஆனால் அதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது கிடையாது. தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டால் தேர்தலை நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.