புலனாய்வுப் பிரிவின் தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
மாறாக அண்மையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டல்ல.
மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் கிடையாது என அரச புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே தற்போது உள்ள பெருந்தொகையான பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் 42 பேர் குறைக்கப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடல் மே தினக் கூட்டத்திற்கும் பாதுகாப்பு குறைப்பிற்கும் தொடர்பு கிடையாது.
அவ்வாறான தீர்மானம் எடுக்கும் அளவிற்கு அரசாங்கம் இழிவான நிலைக்குச் செல்லவில்லை என அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவும் இதேவிதமான கருத்தினை அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.