மழலையர் பள்ளி மீது ராக்கெட் தாக்குதல்: காபூலில் மீண்டும் பதற்றம்
ஆப்கான் தலைநகர் காபூல் அருகே அமைந்துள்ள மழலையர் பள்ளி ஒன்றின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காபூல் அருகே Macrorayan மாகாணத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளி மீது இந்த ராக்கெட் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து அருகாமையில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தில் இருந்து எச்சரிக்கை மணி ஒலித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலை படை தாக்குதலை அடுத்து முழு எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளன பெருவாரியான அரசு அலுவலகங்கள்.
மழலையர் பள்ளி மீது தாக்குதல் நடைபெற்றபோது வகுப்புகள் எதுவும் நடைபெறாததால் உயிர் அபாயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற அமைதி பேரணி ஒன்றின் போது நடந்த தற்கொலை தாக்குத்கலில் 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 230 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத கொடிய தாக்குதல் இதுவென பாதுகாப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடைபெற்ற பகுதி எங்கும் உடல் உறுப்புகள் சின்னபின்னமாக சிதறிக்கிடப்பதை அங்குள்ள ஊடகங்கள் படம் பிடித்து காட்டியுள்ளன.
தாக்குதல் நடந்ததும் பொலிசார் பேரணியை கலைக்கும் பொருட்டு வானத்தில் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை மீட்கும் பொருட்டு பொதுமக்கள் ஈடுபடுகையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அஞ்சியே பொலிசார் வானத்தில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
ஆனால் பேரணியில் ஈடுபட்டவர்கள் அந்த எச்சரிக்கையை தவறாக புரிந்துகொண்டு, பொலிசார் தாக்குதலில் ஈடுபடுவதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகளை சம்பவம் நடந்த பகுதிக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நெருங்காத வகையில் சாலையை முடக்கி இருந்ததால் காயமடைந்தவர்களை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பவும் கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களை அவர்களது உறவினர்கள் மீட்டு தற்போது இறுதிச்சடங்குகளை நிறைவேற்றி வருகின்றனர்.