மலையேறும் போது தவறி விழுந்து முன்னாள் கடற்படை வீரர் உயிரிழப்பு
இங்கிலாந்து கடற்படையின் முன்னாள் வீரர் டுன்கன் பொட்ஸ் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைத்தொடரில் ஏறும்பொழுது ஏற்பட்ட விபத்தின்போது விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை இங்கிலாந்து கடற்படையினர் உறுதி செய்துள்ளனர்.
டுன்கன் பொட்ஸ் கடந்த 11 வருடங்களாக இங்கிலாந்தின் கடற்படையில் பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது பணியில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் அவர் கடந்த புதன்கிழமை தனது நண்பர் ஒருவருடன் அல்ப்ஸ் மலைத்தொடரில் ஏறுவதற்காக சென்றுள்ளார். அவர் மலை ஏறும்பொழுது பெரிய பாறை ஒன்று தளர்ந்து வந்துள்ளது. இதனால் அவர் சுமார் 3 மீட்டர் கீழே வீழுந்துள்ளார். அதனால் காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்து கடற்படையின் முன்னாள் பயிற்சியாளர் கொள் கெவின் ஒலிவர், உயிரிழந்த டுன்கனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கருத்து தெரிவிக்கையில், “டுன்கன் பொட்ஸ் எமது படையில் ஒரு சிறந்த வீரராக செயற்பட்டவர். அவரது உயிரிழப்பு எம் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உயிரிழப்பால் ஆழ்ந்த கவலையில் இருக்கும் டுன்கனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நாம் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.