மலேசிய படகு விபத்து: கர்ப்பிணி பெண் உட்பட 14 பேர் உயிரிழப்பு
மலேசியாவின் கடற்கரை மாகாணமான ஜோஹரில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்திருப்பதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக மலேசிய கடலோர காவற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த படகில் சுமார் 62 பேர்வரை பயணித்திருப்பதாக உள்ளூர் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை, குறித்த படகில் பயணித்தவர்கள் அனைவரும் இந்தோனேஷியர்கள் எனவும் அவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடல் அலையின் வேகம் திடீரென அதிகரித்தமையே குறித்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், படகில் பயணித்திருந்த 34 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்டவர்களுள் எட்டு பெண்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.
மேலும் உயிரிழந்த 14 பேரில், ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.