மர்மக்கிணற்றில் மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் பகுப்பாய்வு!
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட மர்மக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சகல தடையப்பொருட்களும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பகுப்பாய்வு அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் டபில்யு.ஆர்.எஸ்.ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கிணற்றில் அகழ்வு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இவர் கருத்து தெரிவிக்கையில்,
மாந்தை மனித புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கிணற்றின் அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை காலை 11.40 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
மன்னார் நீதிமன்றத்தில் B-741/2015 இன் கீழ் தாக்கல் செய்யப்பட வழக்கு விசாரனைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட நிலையில் மன்னார் மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி என்ற வகையில் எனது தலைமையில் குறித்த கிணற்றின் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக நீதவான் முன்னிலையில் விசேட சட்ட வைத்திய அதிகாரியான எனது தலைமையில் கடந்த 1 ஆம் திகதி திங்கட்க்கிழமை தொடக்கம் நேற்று புதன் கிழமை வரையிலான 3 தினங்கள் குறித்த கிணற்றின் அகழ்வு பணிகள் இடம் பெற்றது.
நேற்று புதன் கிழமை மாலையுடன் குறித்த கிணற்றின் அகழ்வுப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.
எனினும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மண்ணில் தடயங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (4) வியாழக்கிழமை காலை வரை இடம் பெற்றது.
எனினும் குறித்த தினங்களில் மேற்கொள்ளப்பட அகழ்வு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் அனைத்தும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி குறித்த கிணறு தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ள விசாரணையின் போது பகுப்பாய்வு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படும்.
எனினும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் கடந்த 4 தினங்களாக இடம் பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போது அழைக்கப்பட்ட 17 திணைக்களத்தின் அதிகாரிகள் உற்பட அழைக்கப்பட்ட அனைவரும் வருகை தந்து போதிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இதன்போது, அனைவருக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன் என மன்னார் மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் டபில்யு.ஆர்.எஸ்.ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.