மரணத்தின் பின் என்னதான் நடக்கின்றது?அறிவியல் நோக்கு
இவ்வாறான செயற்பாடுகள் 1944ம் ஆண்டுகள் முதலே ஆரம்பித்துவிட்டன. 1944ம் ஆண்டு மனவியல் நிபுணர் “கார்ல் ஜங்” (Carl Jung)மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட மரண அனுபவத்தை தனது சுய சரிதையில் விளக்கமாக எழுதியுள்ளார். அவரது கருத்துகளில் சிலவற்றும் பிற்கால ஆராய்ச்சியாளர்களின் தொகுப்போடு பொருந்தி போகின்றது.
அதைவிட சுவாரசியமான விடயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியை தொலைவில் இருந்து பார்த்த வியத்தகு காட்சியையும் எழுதியுள்ளார்.
அதன் பின் பல ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு சென்று மனிதன் பார்த்த காட்சியும், அக்காட்சியும் ஒத்துபோனது என்பது தான் மிகபெரிய ஆச்சரியம்.
இவ்வாறான நிகழ்வுகளில் ஆர்வம்கொண்ட ஆராய்சியளர்கள் இது கற்பனையா அல்லது நிஜமா என அறியவிரும்பினர்.
இதன் பின் மரணவிளிம்பை சந்தித்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராச்சிக்கு எடுத்துகொள்ளப்பட்டாலும் மரணத்திற்கு பின்னரான கேள்விக்கு முழுமையான விடைகள் கிடைக்கபெறவில்லை. இருந்தும் அந்த சில நிமிடங்கள் என்ன நடக்கின்றது என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்தது.
இவ்வாறான ஆராய்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தாலும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) 1975 ஆம் ஆண்டு எழுதிய “வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை” (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான் இதன் ஆர்வம் மேலும் தூண்டப்பட்டது. இவர் இந்த நூலுக்காக 150 தனிநபர்களின் அனுபவங்களை பயன்படுத்தினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்களின் அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தனது நூலில் வியப்புடன் கூறுகின்றார்.
1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியினை கேட்டு உணர்தல்
ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த தருணத்தில் மரணம் நெருங்குகின்றது என்பதை உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கின்றார்கள். அது இனிமையாக அமையாமல் ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இது இன்னமும் ஒரு புதிராகவே தொடர்கின்றது.
2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம்
கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலை பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாக தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்களது உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாக தெரிவித்தார்கள்.
3) அமைதியும் வலியின்மையும்
மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் அந்த கணத்தில் குறித்த வலி மறைந்து விடுவதோடு பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
4) சுரங்கவழிப் பாதை அனுபவம்
பலரும் கடுமையான இருட்டில் ஒர் சுரங்கவழிப்பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்கு சென்றதாகவும் குறிப்பிட்டார்கள்.
5) பூமியைப் பார்த்தல்
சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது “கார்ல் ஜங்” அனுபவத்தோடு ஒத்துப் போகின்றமை குறிப்பிடத்தக்கது.
6) ஒளி மனிதர்களைக் காணுதல்
சுரங்கவழிப்பாதையின் இறுதியில், பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியில் அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்யிருக்கின்றனர். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களையும், நெருங்கிய உறவினர்களையும் அங்கு பார்த்ததாக சிலர் கூறியிருக்கின்றனர்.
7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்
ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியை பலரும் கூறியிருக்கின்றனர். இருந்தும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லையாம் (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)
8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல்
அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாகவும் வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காணகூடியதாகவும் அமைந்ததாம்.
9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என தெரிவிக்கப்படல்
அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இன்னம் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் கூறியிருக்கின்றனர். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாக சிலரும் தெரிவித்திருக்கின்றனர்.
என்ன வாசித்தபின் கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தது போல் உணர்கின்றீர்களா?
சில நேரங்களில் நாம் சிறுவயதில் வாசித்து வந்த கதைகளும் உண்மைபோலும்,எதற்கு சந்தேகம் எப்படியும் ஒரு நாள் சந்திக்கதான் போகின்றோம். அன்று பார்த்துக்கொள்வோம்.